(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற தேர்தலுக்கான புதிய திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத் தேர்தல் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று(18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 24 ஆம் பிரிவின் மூன்றாவது சரத்தின் பிரகாரம், பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்காது தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
மேலும் எதிர்கால ஊகத்தின் அடிப்படையில் இத்தகைய சட்டங்களை புறக்கணிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழு முதலில் 24 ஆவது பிரிவின் மூன்றாவது சரத்தின் கீழ் தனது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், அதன்பின்னர் நிலுவையில் உள்ள சிக்கல்கள் தொடர்பில் விவாதிக்க வேண்டும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பெரும்பாலும் எதிர்வரும் மே மாதம் 23ம் திகதி அல்லது 30ம் திகதி தேர்தல் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.