பொதுத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு..?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும், அக்காலப்பகுதியில் கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவும் அவதானம் குறையாத போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு மேலும் தேர்தலை பிற்போடுவதற்கு அதிகாரம் உள்ளதாக கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கம தெரிவித்துள்ளார்.

மஹிந்தானந்த அவரது நாவலப்பிட்டி வீட்டில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்;

“.. கடந்த மார்ச் மாதம் 2ம் திகதி ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதோடு ஏப்ரல் மாதம் 25ம் திகதி பாராளுமன்றத்தினை கூட்டுவதற்கு தேர்தல் ஆணைக்குழு திகதி குறித்திருந்தது.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நேற்று (20) கூடிய தேர்தல் ஆணைக்குழு கூட்டத்தில், பாராளுமன்ற 1981ம் சட்டத்தின் கீழ் 24வது சரத்தின் படி ஆணைக்குழுவிற்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவது என அறிவித்திருந்தது.

அது ஆணைக்குழுவின் கடமையும் கூட, இப்போது மக்களின் நிலைப்பாடு என்னவென்றால் ஊரடங்குச் சட்டத்தினை தளர்த்தி பாராளுமன்ற தேர்தலுக்கு திகதி குறித்து அரசாங்கம் கொரோனாவுடனே தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவே எண்ணியுள்ளனர்.

இது தப்பானதொரு புரிதலாகும். ஜுன் மாதம் 20ம் திகதி அளவில் கொரோனா நிலைமை வழமைக்கு திரும்பாதவிடத்து தேர்தல் தினத்தில் மாற்றத்தினை தேர்தல் ஆணைக்குழு ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை..” எனத் தெரிவித்திருந்தார்.