(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியமைக்கு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமையே காரணம் என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று(16) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;
“.. இலங்கையில் அண்மையில் அரச இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இலங்கையில் இணைய பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) காணப்படுகின்றது. அத்துடன், விமானப்படையினரின் கணினிப்பிரிவும் மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. இவை இரண்டும் இணைந்து செயலாற்றுகின்றன.
இந்நிலையில், சைபர் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட அறிவுறுத்தல்களை, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) வழங்கியுள்ளது.
பெரும்பாலான அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் அதனை பின்பற்றியுள்ளன. எனினும், ஒரு சிலர் அதனை பின்பற்றவில்லை. உரிய நேரத்தில் உரிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமை காரணமாக குறித்த திணைக்களங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளானமைக்கான பிரதான காரணமாக நாங்கள் காண்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.