(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இன்றைய தினம் (10) மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள இந்நிலையில், இதுவரையில் மொத்தம் 252 பேருக்கு அங்கு தொற்று உறுதியாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (09) 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் ஒரே நாளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 196 ஆக அதிகரித்துள்ள நிலையில் கடந்த மே மாதம் 27ம் திகதி 150 ஆகவும் அதற்கு முன்னர் மே மாதம் 26ம் திகதி 137 ஆகவும் பதிவாகியுள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பப்பட்ட போதைப்பொருளுக்கு அடிமையானோரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல், நேற்று (09) காலை மாரவில பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இனங்காணப்பட்ட நிலையில், கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைப்பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் கொரோனா வைரஸ் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனர் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
கொரோனா தொற்று தொடர்பில் தொடர்ந்தும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் சுகாதார வழிமுறைகள் இலங்கையில் மந்தமாகவே காணப்படுகின்றது.
உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கையில்,
“.. கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுகிற உயிர்ப்பலிகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கலாம் ஜூன் மாதத்தில் நாம் பார்த்தது கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்புதான். அத்துடன் இன்னும் வேகம் எடுக்காதது, உயிர்ப்பலிகள்தான். அதற்கு இன்னும் காலம் எடுக்கும். இதில் சில பின்னடைவுகள் இருக்கலாம். பலி எண்ணிக்கை உயரப்போவதை இனி நாம் காண முடியும்”
“கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் பாதிப்பு அதிரடியாக கூடிக்கொண்டே வருகிறது. ஆனால் பலி எண்ணிக்கை மே மாதம் முதல் ஸ்திரமாக உள்ளது. பலி எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். டாக்டர்கள், நர்சுகள் ஆகியோர் கொரோனா நோயாளிகளை நிர்வகிக்க கற்றுக்கொண்டு விட்டனர். இதுதான் உயிர்ப்பலி குறைவதில் முக்கிய பங்கு வகிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.