ஊரடங்கு தொடர்பிலான முக்கிய அறிவித்தல் : உடனடி PCR பரிசோதனைகளுக்கு GMOA கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது கட்டம் உருவாகி வருவதாக மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது.

அது ஏனெனில் அண்மைக்காலமாக நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் ஒருவர் இருவர் என்றும் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர் என்றும் தெரிவித்திருந்த நிலையில் நேற்றைய தினம் (09) 57 நோயாளிகளும் இன்றைய தினம் (10) 196 நோயாளிகளும் இணங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் 26ம் திகதி 137 நோயாளிகளும் மே மாதம் 27ம் திகதி 150 நோயாளிகளும் பதிவாகிய நிலையில் சடுதியாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் நேற்று(09) காலை மாரவில பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் இனங்காணப்பட்ட நிலையில், கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார சேவைப்பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

எனினும், குறித்த பெண் குருணாகலை, நீர்கொழும்பு, நாத்தாண்டிய ஆகிய பேரூந்து வழித்தடங்களில் பல பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் பயணித்திருந்தமை தெரியவந்துள்ளது.

இதன்படி பொலன்னறுவையில் இருந்து குருணாகலை வரையும் பயணித்திருந்த அப்பெண் அங்கிருந்து நீர்கொழும்பு பிரதேசத்திற்கும் பயணித்துள்ளார்.

அதன்பின்னர் அங்கிருந்து தங்கொடுவை வரை பயணித்து நாத்தாண்டிய பிரதேசத்திற்கும் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இன்று(10) முந்தல் வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மாரவில பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கை கிடைக்கும் வரை வைத்தியசாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கையில் மீண்டும் சமூகத்திற்குள் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டு மக்களுக்கு உடனடியாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு செய்யவில்லை என்றால் நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டால் அதன் பொறுப்பை சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என சங்கத்தின் செயலாளர் சேனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க தேர்தல் காலமும் நெருங்குகிறது. பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றத் தவறி வருகின்ற நிலையில், சமூக வலைதளங்களில் மீளவும் ஊரடங்குச் சட்டம் என பெரிய எழுத்துகளில் செய்திகள் பரவி வருகின்றன.

இது தொடர்பில் பொலிசாரிடம் வினவியதில் ஊரடங்கு உத்தரவு தொடர்பில் எவ்வித அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என்றும். சமூக வலைதளங்களில் மக்கள் மத்தியில் பீதியினை தூண்டும் வகையில் சிலர் நடந்து கொள்வதாகவும், அவ்வாறு எந்தவொரு செய்தியிலும் இதுவரையில் உண்மைத் தன்மை இல்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

 

ஆக்கம் – ஆர்.ரிஷ்மா