(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் ஆபத்து நிலை இன்னும் நீங்கவில்லை என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சமூகத்திற்குள் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படலாம் என குறித்த சங்கத்தின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதனால் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமையினாலான விபரீதமே இந்தியாவின் பலி எண்ணிக்கைகளுக்கு காரணம் என அவர் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தார்.
தற்போது தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் வைரஸ் கட்டுப்படுத்திய நிலைமை ஒன்று இலங்கையில் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றை தினம் (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நாட்டில் நேற்று(24) 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தை சேர்ந்த 3 பேரும் சேனபுர புனர்வாழ்வு மையத்தை சேர்ந்த 5 பேரும் கட்டாரில் இருந்து நாடு திரும்பிய நான்கு பேருக்குமே இவ்வாறு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நட்டில் இதுவரையில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,782 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் கொவிட்-19 தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,106 ஆக உயர்வடைந்துள்ளது.
சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 665 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.