ஆசை வெட்கம் அறியாது : மும்முனைப் போட்டியில் ஞானசார தேரருக்கு ஆப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எங்கள் மக்கள் சக்தி கட்சியின் (அபே ஜனபல பக்ஷ) தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நிலைக்கு கலகொட அத்தே ஞானசார தேரரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதும் எங்கள் சக்தி மக்கள் கட்சியின் செயலாளர் வெடினிகம விமலதிஸ்ஸ தேரர், தம்மை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்குமாறு பரிந்துரைத்து தேர்தல் ஆணைக்குழுவில் கடிதம் ஒன்றை ஏற்கனவே கையளித்துள்ளார்.

எனினும் கட்சியின் மத்திய செயற்குழுவில் கலகொட அத்தே ஞானசார தேரரை நியமிப்பதாக எடுக்கப்பட்ட முடிவுக்கு இணங்க வெடினிகம விமலதிஸ்ஸ தேரர் கையளித்த கடிதம் செல்லுபடியாகாது என்று எங்கள் மக்கள் சக்தி கட்சியினர் தேர்தல் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு இருக்க ஞானசார தேரரை தேசிய பட்டியலின் ஊடாக பாராளுமன்றுக்கு அனுப்புவதில் சட்டச் சிக்கல்கள் உள்ளதாக எங்கள் மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளர் சமன் பெரேரா தெரிவிக்கையில்;

“.. ‘எங்கள் மக்கள் சக்தி’ கட்சிக்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ள போதிலும் இதில் சட்டச் சிக்கல் உள்ளதை மறுப்பதற்கில்லை.

தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களும் தேர்தலில் போட்டியிட முன்னர் தேசிய பட்டியலில் பெயர் குறிக்கப்பட்டவர்களும் மாத்திரமே தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்ல முடியும் என்ற நிலைமை காணப்படுகிறது. எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியலில் ஞானசார தேரரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை.

கட்சியின் செயற்குழு ஏகமனதாக எடுத்த தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலமாக அறிவித்துள்ளோம். காணப்படும் சட்டச்சிக்கலை முறையாக வெற்றி கொண்டு ஞானசார தேரரை நிச்சயம் பாராளுமன்றத்துக்கு அனுப்புவோம். அத்துரலியே ரத்ன தேரர், எங்கள் மக்கள் சக்தி கட்சியில் போட்டியிட்ட ஒரு வேட்பாளர் மாத்திரமே. தேசியப் பட்டியல் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது. கட்சியின் மத்திய செயற்குழு ஞானசார தேரருக்கு தேசிய பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ள ஆசனத்தை வழங்கவே தீர்மானித்துள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் தொகுதிக்கு ஒரு பிரதிநிதியை நியமிக்க தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்து வருகிறார்.

அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்;

“.. தனக்கும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் இடையே எந்த நெருக்கடியும் இல்லை. ஞானசார தேரர் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்பவர்கள் இருப்பதை போலவே, தானும் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்று சொல்பவர்களும் உள்ளனர்.

இதேவேளை பாராளுமன்றத்தில் மிகவும் அறிவுள்ள மூன்று அல்லது நான்கு அரசியல்வாதிகளில் ஒருவரான தாம், சர்வதேச மற்றும் தேசிய அரசியல் குறித்த பரந்த அறிவை கொண்டிருகிறேன். அதன்படி தேசிய பட்டியல் உறுப்பினர் பதவி குறித்து விவாதிக்க தற்போதைய செயலாளர் வர வேண்டும்.

எங்கள் மக்கள் சக்தி கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம். குறித்த விடயம் உடல் வலிமை அல்லது கொடுமைப்படுத்துதல் ஆகியவற்றால் தீர்வு காணவேண்டிய விடயம் அல்ல எனவே சட்டம் ரீதியாகத் தீர்க்கப்பட வேண்டும்.

தனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை ஆனால், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நீதி தேவை அதனால் இந்த முடிவை எடுத்தேன். ஒரு தேசிய வியாபாரத்தை மேற்கொள்ள அமைச்சர் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதைச் செய்யமுடியும்.

கட்சியின் செயலாளர் வெதினிகம விமல திஸ்ஸ தேரர் தலைமறைவாக உள்ளார் என்ற வதந்திகள் பொய்யானவை, இந்த நாட்களில் அவர் ராஜகிரிய – சதஹம் சேவனேவில் வசித்து வருகிறார்..” எனவும் அதுரலியே ரதன தேரர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு தேசியப் பட்டியல் வழங்குவதில் தொடர்ந்தும் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், துப்பவும் முடியாது விழுங்கவும் முடியாது இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் ஞானசார தேரர் தேசியப் பட்டியலை எதிர்பார்த்திருக்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.