
‘எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்’
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு பங்குச்சந்தையினை டிஜிட்டல் மயப்படுத்தும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
‘எதிர்காலத்திற்கான ஒரு பாய்ச்சல்’ (Hyper leap to the future) என்ற தொனிப்பொருளின் கீழ் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு நினைவு குறிப்பொன்றை முன்வைத்த பிரதமர், கொழும்பு பங்குச் சந்தையினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இணையத்தளத்தை வெளியிட்டு வைத்தார்.
கொழும்பு பங்கு பரிவர்த்தனை கையடக்க தொலைபேசி பாவனையின் ஊடாக நாடளாவிய ரீதியில் பரந்து வாழும் முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை அல்லது தரகு நிறுவனங்களுக்கு செல்லாது கணக்குகளை ஆரம்பிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல்மயப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் பெருந்திரளான தகவல்களை உள்ளடக்கி கொழும்பு பங்கு பரிவர்த்தனை, மத்திய வைப்பு சேவைகள் அமைப்பு ஆகியவற்றின் இணையத்தளம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.
அதன் மூலம் முதலீடு, கல்வி, நிதி எழுத்தறிவு என்பவற்றை இலக்காக கொண்டு இலங்கை பத்திரங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிமுகப்படுத்தும் யூ டியூப் (You Tube) சேனலும் வெளியிடப்பட்டது.
மேலும் கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் கையடக்க தொலைபேசி பாவனையின் நவீன பதிப்பின் ஊடாக கணக்குகளை ஆரம்பிக்கக் கூடியதுடன் சந்தை கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளல் மற்றும் அந்த கணக்கை விரும்பிய இடத்திலிருந்து விரும்பிய நேரத்தில் இலகுவாக பரிசீலிப்பதற்குரிய வசதிகளும் காணப்படுகின்றன.
குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான அஜித் நிவாட் கப்ரால், ஷெஹான் சேமசிங்க, லொஹான் ரத்வத்தே, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல, இலங்கை பத்திரங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்ன, பணிப்பாளர் நாயகம் சிந்தக மெண்டிஸ் மற்றும் இலங்கைக்கான வெளிநாட்டு தூதரங்களில் இருந்து வருகை தந்த அதிதிகள், தரகு நிறுவனங்கள், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் இலங்கை வர்த்தக சமூகத்தினர் கலந்து கொண்டனர்.