விஜய் சேதுபதியின் ரசிகர் மன்றத் தலைவர் கொலை

விஜய் சேதுபதியின் ரசிகர் மன்றத் தலைவர் கொலை

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – விஜய் சேதுபதி ரசிகர் மன்றத் தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதுச்சேரியில் இருக்கும் கோவிந்தசாலையை சேர்ந்தவர் மணிகண்டன் (36). பெயிண்டர். அவர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவராக இருந்து வந்தார். கடந்த 4ம் திகதி இரவு மணிகண்டனை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.

விசாரணையில் மணிகண்டனை விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டு அவரின் உறவினர் ராஜசேகர் (33) கொலை செய்தது தெரிய வந்தது. விஜய் சேதுபதி ரசிகர் மன்ற செயலாளராக இருந்து வந்த ராஜசேகருக்கு தலைவர் ஆகும் ஆசை ஏற்பட்டுள்ளது.

தலைவர் பதவி தொடர்பாக மணிகண்டன், ராஜசேகர் இடையே பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ராஜசேகரை செயலாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளனர். தன் பதவி பறிபோனதற்கு மணிகண்டன் தான் காரணம் என்று ராஜசேகர் அவர் மீது கோபம் அடைந்தார்.

ராஜசேகர் தன் ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டு வந்த நிலையில் மணிகண்டனை கொலை செய்துள்ளார்.

மணிகண்டன் கொலை வழக்கில் ராஜசேகர், அவருக்கு துணையாக இருந்த சுனில், சந்தோஷ், ஜான்சன், மாறன் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கத்திகள், 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு ரசிகர் மன்ற தலைவர் பதவிக்காக ராஜசேகர் தன் உறவினரையே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.