ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னை விலக்கியமைக்கு எதிராக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இக்குறித்த வழக்கு நேற்று(5) திங்கட்கிழமை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான மாலினி குணரத்ன, தீபாலி விஜேசுந்தர, எம்.எம்.ஏ. கபூர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே மேலதிக விசாரணைகளுக்காக மேற்படி தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் ஆஜராகியிருந்தனர்.
தன்னை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கியமை சட்டத்திற்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த செப்டெம்பர் 18 ஆம் திகதி மேற்படி வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோர் இவ்வழக்கின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.