AIDS நோய் என புறக்கணிக்கப்பட்ட மாணவனுக்கு ஜனாதிபதி பாடசாலை வழங்க உறுதி

AIDS நோய் தொற்றியுள்ளதாக போலி பிரச்சாரம் மேற்கொண்டதன் காரணமாக பாடசாலையை இழக்க நேரிட்ட சிறுவனின் தாயராருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(05) தொலைபேசி ஊடாக உரையாடியுள்ளார்.

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று குளியாப்பிட்டிய பிரதேசத்திற்கு சென்று, சிறுவன் மற்றும் அவரது தாயாரை சந்தித்த சந்தர்ப்பத்தில் தனது தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தி ஜனாதிபதியிடம் கொடுத்துள்ளார்.

இதன்போது சிறுவனின் தாயார் தனது மகனுக்கு பாடசாலை ஒன்றினை பெற்று தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த குடும்பத்திற்கு எந்தவொரு தொந்தரவுகளும் ஏற்படுவதற்கு தான் இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாடசாலையில் அனுமதியை பெற்று தருவதாக சிலர் வாக்குறுதி அளித்தாலும், தற்போது வரையில் உறுதியாகவில்லை என சிறுவனின் தாயார் கூறியுள்ளார்.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆரம்பத்தில் இருந்தே இந்த சிறுவனின் சம்பவம் தொடர்பில் தலையிட்டு வருகிறார். இதற்கு முன்னரும் இவரது தலையீட்டு காரணமாக சிறுவனுக்கு பாடசாலை ஒன்றில் அனுமதி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.