CMC ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகளால் பாலியல் தொல்லை…

கொழும்பு நகர சபையில் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு அங்குள்ள உயர்மட்ட அதிகாரிகளால் பாலியல் தொல்லைகள் இடம்பெற்று வருவதாக நகர சபை உறுப்பினரான ஷர்மிலா கோனன்வில நகராதிபதி ரோசி சேனாநாயக்கவிடம் கடந்த 27ம் திகதி முறைப்பாடு ஒன்றினை முன்வைத்துள்ளார்.

கடமை நேரங்களில் பல சந்தர்ப்பங்களில் தாம் பாலியல் தொல்லைகளுக்கு முகங்கொடுப்பதாகவும் அங்குள்ள பெண் ஊழியர்கள் பயத்தில் இது குறித்து நெடுநாட்களாக இரகசியமாக வைத்திருந்ததாகவும் குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகான இரு கண்கள், சாரி அழகானது என பணியாளர்களை பல்வேறு கோணங்களிலும் பாலியல் தொல்லை என்ற முறையின் கீழ் உயர் அதிகாரிகள் கையாளுவதாகவும், இவற்றினை வெளியில் கூறினால் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்வதாக மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த நகர சபை உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த சந்தர்ப்பங்களுக்கு முகங்கொடுத்திருந்த பெண்களால் வழங்கப்பட்ட எழுத்து மூல சாட்சிகளும் நகராதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன் பிரதி ஒன்று மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்காரவுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்காக குழுவொன்று நியமித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், குறித்த அதிகாரிகள் மீது கடுமையான தீர்மானம் எட்டப்பட்டு சட்டம் அமுல்படுத்த வேண்டும் எனவும் நகர சபை உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.