(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – ‘அசுரன்’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வந்தார் தனுஷ். லண்டன் படப்பிடிப்பைத் தொடர்ந்து, இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இதில் மதுரையில் நடைபெற்று வந்த காட்சிகளின் படப்பிடிப்போடு, தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே முடிவடைந்தன. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் தனுஷ்.
அதனைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவில் தனுஷ், “D40 படப்பிடிப்பு முடிந்தது. என்னுடைய படங்களில் விரைவாக முடிக்கப்பட்ட படம் இது. கார்த்திக் சுப்புராஜ் போன்ற நகைச்சுவை உணர்வுள்ள, விவேகமான, தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு இயக்குநருடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படம் சிறப்பானதாக இருக்கப் போகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
தனுஷின் ட்வீட்டிற்குப் பதிலளிக்கும் விதமாக கார்த்திக் சுப்புராஜ், “அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சார். உங்களைப் போன்ற ஒரு அற்புதமான நடிகருடன் பணிபுரிந்தது எனக்கும் என்னுடைய குழுவினருக்கும் மிகப்பெரிய அனுபவம்” என்று தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், அஸ்வந்த் உள்ளிட்ட பலர் தனுஷுடன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார்.