“GAJA” சூறாவளி – மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள்…

மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறியளவில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும் எனவும், நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

“GAJA” என்ற சூறாவளி வலுவடைந்து இலங்கைக்கு வடகிழக்காக காங்கேசன்துறையிலிருந்து 700 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 13.2N, கிழக்கு நெடுங்கோடு 85.6E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 24 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளியாக வலுவடைந்து மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து பாரிய சூறாவளியாக விருத்தியடையும் சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக பொத்துவிலிலிருந்து திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதோடு கடலும் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.

மீனவர்கள் பொத்துவிலிலிருந்து திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.