H1B விசா நிறுவனங்களுக்கு காத்திருக்கும் சிக்கல் நிலை – USCIS கடும் சட்ட நடவடிக்கை..

அமெரிக்க குடிவரவு குடியகல்வு திணைக்களமானது H1B விசாக்களில் இடம்பெறும் மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

H1B விசா திட்டமானது அமெரிக்காவில் திறமையான ஊழியர்கள் கிடைக்காத நிலையில் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை அழைத்து வருவதற்காக கொண்டு வரப்பட்ட விசா நடைமுறையாகும்.

எனினும், அமெரிக்காவில் தகுதியான ஊழியர்கள் இருக்கின்ற போதிலும், H1B விசாவை முறைகோடாக பயன்படுத்தி குறைந்த சம்பளத்தில் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க ஊழியர்களை பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து USCIS வெளியிட்டுள்ள அறிக்கையில்;

தொழில் பற்றிய தகவல்கள் அறியப்படாத நிறுவனங்கள், H1B விசா ஊழியர்களை பிரதானமாக நம்பி இயக்கப்படும் நிறுவனங்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்.

இனிவரும் காலங்களில் கள ஆய்வுகளில் கூடுதல் முன்னுரிமை வழங்கப்படும். அத்துடன், ஒரு நிறுவனத்தின் முதலாளி வேறு ஒரு நிறுவனத்திலோ அல்லது இன்னொரு நிறுவன அலுவலகத்திலோ வேலை பார்த்து வந்தால், குறித்த நிறுவனத்தின் H1B விசா ஊழியர்கள் பற்றியும் முழு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

அந்தக் கள ஆய்வுகள் மூலம் அந்த நிறுவனங்கள் அமெரிக்க ஊழியர்களை பணியில் அமர்த்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் குறித்தும் ஆராயப்படும்.

H1B ஊழியர்களுக்கு பாதுகாப்பு முன்னறிவுப்பு இல்லாமல், தெரிவு செய்யப்படும் நிறுவனங்களின் விசா விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வில் H1B ஊழியர்கள் மீது குற்றவியல் அல்லது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.

மாறாக, விசா திட்டத்தை மோசடி செய்யும் நிறுவனங்களை கண்டறிவதற்காகவே இந்த கள ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். விசாவில் குறிப்பிட்டுள்ள ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதிக்கப்பட்ட அமெரிக்க ஊழியர்கள் அல்லது H1B ஊழியர்கள் REPORTH1BABUSE@USCIS.DHS.GOV என்ற மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பலாம்.

குறித்த தகவல்கள் துறை அலுவலர்களின் மேலதிக புலனாய்வுக்கு பயன்படுத்தப்படும். ஊழியர்கள் Form WH 4 ஐப் பயன்படுத்தியும் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.

இதேவேளை, முறைகேடுகள் பற்றிய தகவல் தெரிவிக்கும் H1B ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சில பாதுகாப்புகள் வழங்கப்படும்” எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக விபரங்களை https://www.uscis.gov/news/news-releases/putting-american-workers-first-uscis-announces-further-measures-detect-h-1b-visa-fraud-and-abuse என்ற இணையப் பக்கத்தில் பார்க்கலாம்.

 

(rizmira)