H1N1 வைரஸ் தொற்று மீண்டும் பரவக் கூடிய ஆபத்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை…

இலங்கையில் H1N1 வைரஸ் தொற்று மீண்டும் பரவக் கூடிய ஆபத்து காணப்படுவதாக மத்திய மாகாண சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மூன்று மாத காலத்தில், நாடு முழுவதும், 500ற்கும் மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக மத்திய மாகாணத்தில் H1N1 வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய மாகாண சுகாதார அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று மாத காலத்தில், இரு கர்ப்பிணிகள் உள்ளிட்ட 17 மரணங்கள் பதிவாகியுள்ளன. 115 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களை உறுதிப்படுத்திய மாகாண சுகாதார சேவைகளுக்கான இயக்குநர் டாக்டர் சாந்தினி சமரசிங்க;

“கர்ப்பிணிகள், முதியவர்கள், நீண்ட கால நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இந்த வைரஸ் காய்ச்சல் தொடர்பாக கவனத்துடன் இருக்க வேண்டும், குறித்த வகையினருக்கு இந்த வைரஸ் தாக்கம் ஏற்படும் போது மரணம் ஏற்படக் கூடிய ஆபத்து உண்டு” என்றும் சுட்டிக்காட்டிய அவர் “சுகதேகியான ஒருவருக்கு இந்நோய் ஏற்பட்டால் சாதாரணமாக குணமாகிவிடும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)