தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தியேட்டர்களில் நேரடியாக ஒளிபரப்ப திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மார்ச் முதலாம் ஆம் திகதி முதல் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த ஒரு மாதமாக புதிய படங்கள் வெளியாகவில்லை. படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சினிமா தொடர்பான பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளன.
தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பழைய படங்களும், பிறமொழி படங்களும் மட்டுமே தியேட்டர்களில் ஓடுகின்றன.
எனவே, தொழிலாளர்கள் சம்பளம், தியேட்டர் பராமரிப்பு ஆகியவற்றுக்கு போதிய வருமானம் இல்லாத நிலை உள்ளது.
இதேவேளை, தெலுங்கு பட அதிபர்களும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
எனவே, சினிமா தியேட்டர்களின் வருமான இழப்பை தவிர்க்க, தமிழக தியேட்டர்களில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் தியேட்டர்களுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இதற்காக ஒருசில தியேட்டர்கள் சார்பில் ஐ.பி.எல். போட்டியை திரையிட அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை பொலிஸ் கமிஷனரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுபோல், பெரும்பாலான தியேட்டர்களில் ஐ.பி.எல். போட்டியை நேரடியாக திரையிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.