இஸ்லாமிய ஆட்சி என்ற பெயரால் வெறியாட்டத்தில் ஈடுபடும் IS,அல் கொய்தா, போகோஹரம் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளை அழிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து அமெரிக்காவில் 68 நாடுகள் கூடி அவசர ஆலோசனை நடத்தவுள்ளன.
சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளை கைப்பற்றி மக்களை கொடுமைப்படுத்தி அட்டூழியம் செய்து வரும் IS தீவிரவாதிகள் உலகம் முழுவதும் இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஒரே இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கப் போவதாக சபதம் ஏற்றுள்ளனர்.
இதை எதிர்க்கும் நாடுகள் மீது தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் IS தீவிரவாதிகளை அழித்தொழிப்பது எப்படி? என்பது தொடர்பாக புதிய செயல் திட்ட அறிக்கை தயாரிக்குமாறு அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகானுக்கு கடந்த ஜனவரி மாதம் 28-ம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வரும் 22-23 திகதிகளில் நடைபெறும் குறித்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அமெரிக்காவின் நேசத்துக்குரிய நாடுகளாக இருந்து வரும் 68 நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துற மந்திரிகள் கலந்து கொண்டு விவாதித்து, முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளனர்.
இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.