விருது பெற்ற பிரபல ஹிந்தி மொழி திரைப்படம் ஒன்றை சில விதிகளுக்கு உட்பட்டு வெளியிடலாம் என தணிக்கை குழுவின் மேல்முறையீட்டு குழு அனுமதி வழங்கியுள்ளது.
`Lipstick Under My Burkha` என்ற அந்த திரைப்படம், “பெண்கள் தொடர்பானதாக” உள்ளது என்றும் பாலியல் ரீதியான காட்சிகளும், தவறான உரையாடல்களும் இருப்பதாக கூறி, தணிக்கைக் குழுவால் சான்றிதழ் மறுக்கப்பட்டது.
இந்தியாவின் ஒரு சிறிய நகரத்திலிருந்து வரும் நான்கு பெண்களின் வாழ்க்கையை அந்த திரைப்படம் சித்தரிக்கிறது.
[youtube url=”https://www.youtube.com/watch?v=EpHqeHF8NM0″ width=”560″ height=”315″]
தணிக்கைக் குழுவின் மேல்முறையீட்டு குழு, அந்த படத்திற்கு “ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளது மேலும் அப்படத்தில் சில காட்சிகளை நீக்குமாறு இயக்குநரிடம் கோரப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன் Lipstick Under My Burkha, டோக்கியோவில் திரையிடப்பட்டது; அதன்பின் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றில் பல விருதுகளையும் பெற்றது.
திரைப்படத்தில் கூடுதலாக சில காட்சிகளை நீக்கினால், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படும் “ஏ” சான்றிதழ் வழங்கப்படும் என மேல்முறையீட்டு குழு தெரிவித்துள்ளது.
பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களைக் குறிப்பிடும் காட்சி உட்பட சில காட்சிகளில் சத்தத்தை நீக்குமாறு கோரப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
முன்னதாக, அலைபேசியில் பாலுறவு குறித்து பேசுவது, முஸ்லிம் மக்களின் மனதை காயப்படுத்தும் விதமான காட்சிகள் ஆகியவை `Lipstick Under My Burkha` திரைப்படத்தில் இடம் பெற்றிருப்பதாக தணிக்கைக் குழு தெரிவித்திருந்தது.
திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடை, பெண் உரிமை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இயக்குநர் அலன்க்ரிதா ஸ்ரீவட்சவா முறையிட்டார்.
சமீப காலமாக இந்தியாவின் தணிக்கை குழு, முரண்பாடாக, பொதுப்படையாக இல்லாமல், இந்தியாவில் மாறிவரும் சமூகத்திற்கு ஏற்ப முடிவுகளை எடுக்காமல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, திரைத்துறையைச் சார்ந்தவர்களிடமிருந்து பல விமர்சனங்களை பெற்று வருகிறது என பிபிசியின் கீதா பாண்டே தெரிவிக்கிறார்.
கடந்த வருடம் `உட்த்தா பஞ்சாப்` என்ற ஹிந்தி படத்தில் 94 காட்சிகளை நீக்க வேண்டும் என தணிக்கைக் குழு தெரிவித்திருந்தது.