பாராளுமன்ற அமர்வின்போது அமைதியற்ற முறையில் செயற்பட்ட, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர் பிரசன்ன ரணவீரவிற்கு தற்காலிகத் தடை விதிப்பதற்கு பரிந்துரைக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று(16) பாராளுமன்ற சிறப்புரிமைக் குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த பிரசன்ன ரணவீர, தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறைந்தபட்சமாக 4 வாரங்களுக்குத் தடை விதிக்க முடியும் என அவர் கூறினார்.
இரு சந்தர்ப்பங்களில், அமைதியற்ற முறையில் செயற்பட்டதால் பிரசன்ன ரணவீரவிற்குத் தடை விதிப்பதற்குப் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற சிறப்புரிமைக் குழு உறுப்பினர் தெரிவித்தார்.
கடந்த 3 ஆம் திகதி பாராளுமன்ற விவாதத்தின்போது, அமைதியற்ற முறையில் செயற்பட்டதுடன், செங்கோலையும் எடுப்பதற்கு முயற்சித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் பரிந்துரையை இன்று(17) சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.