இந்தியாவில் நேற்று ஆரம்பமான 6ஆவது இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகள் வெற்றிபெற்றன.
நேற்றைய முதல் போட்டியில் மோதிய சிம்பாப்வே மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வேயின் சிபான்டா 59 ஓட்டங்களையும், சிகும்புரா ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் எடுக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை சேர்த்தது.
பின்னர் 159 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹொங்கொங் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சிம்பாப்வே அணி 14 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
நேற்றைய இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கான், 20 ஓவர்களில் 5 விக்கட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் மொஹமட் 61 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு ஆடிய ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.