TNA மற்றும் UNP ஒப்பந்த ஆவணம் சமூக வலைதளங்களில் வைரல்..

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையே இரகசிய ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் போலியான ஆவணப் பிரதியொன்று வைரலாக பரவி வருகின்றது.

பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு காணப்படுகின்றமையினால், அவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கை பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கியிருந்த நிலையில் குறித்த ஆவணம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது எனலாம்.

குறித்த ஆவணத்தில்;

“.. ஐக்கிய தேசியக் கட்சியினர் வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து வடகிழக்கு மாகாணமாக மாற்றியமைப்பதாகவும், வடகிழக்கு பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களை முற்றாக ஒழிப்பதாகவும், அப்பகுதிகளில் உள்ள புதிய விகாரைகளை நிர்மாணிப்பதை கட்டுப்படுத்துதல் மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது…”

அத்துடன் அந்த ஒப்பந்தத்தில் ரணில் விக்ரமசிங்கவின் கையொப்பமும் சம்பந்தனின் கையொப்பமும் இடப்பட்டிருந்த நிலையில், குறித்த ஒப்பந்த ஆவணமானது முற்றிலும் சிங்கள மொழியில் இருப்பதனால் தமிழ்த் தேசியக் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அதில் கையெழுத்திடுவதற்கான சாத்தியம் இல்லை. ஆகவே இவ் ஒப்பந்தமானது ஒரு போலியானதாக இருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றது.