ஒரு லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இலங்கைக்கு வழங்க இணக்கம்..

ஒரு லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இலங்கைக்கு வழங்க இணக்கம்..

தாய்லாந்து, ஒரு லட்சம் மெற்றிக்தொன் நாட்டரிசியை இலங்கைக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பான புரிந்துணர்வுக் கடிதமும், கொள்வனவு சம்பந்தமான ஆவணங்களும் ஒரு வாரத்திற்குள்ளே தாய்லாந்து அரசுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

1 மெற்றிக்தொன் நாட்டரிசியை 425டொலருக்கு வழங்குவதற்கு தாய்லாந்து அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு ஏற்கனவே மியன்மார் அரசு 30ஆயிரம் வெள்ளைப்பச்சை அரிசியை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. 1மெற்றிக்தொன் அரிசி 290 டொலருக்கும் 350 டொலருக்கும் இடைப்பட்ட விலைகளில் இதனை வழங்குவதற்கும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அத்துடன் செப்டம்பர் மாதம் அளவில் நாட்டரிசியை வழங்கவும் மியன்மார் உறுதி அளித்துள்ளது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அரசும் 25ஆயிரம் மெற்றிக்தொன் வெள்ளைப்பச்சை அரிசியை வழங்குவதற்கு முடிவு செய்துள்ள போதும், இறக்குமதி செய்யும் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. அதற்கான பேச்சுவார்த்தைகள் இரண்டு நாடுகளுக்குமிடையே தற்போது இடம்பெற்று வருவதாகத் தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் செப்டம்பர் மாதம் அளவில் 1 இலட்சம் நாட்டரிசியை வழங்குவதற்கு பாகிஸ்தான் அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மியன்மார், தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி சீராக நடைபெற்ற பின்னர் இலங்கையில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு எந்தவிதமான காரணமும் இல்லையென அமைச்சர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.

 

 

(rizmira)