இரண்டாவது போட்டி மற்றும் உலகக் கிண்ண சுற்று குறித்து மாலிங்கவின் உளப்பூர்வ அறிவிப்பு…

இரண்டாவது போட்டி மற்றும் உலகக் கிண்ண சுற்று குறித்து மாலிங்கவின் உளப்பூர்வ அறிவிப்பு…

2019ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கு கொண்டு விளையாட தாம் மிகுந்த ஆவலுடன் இருப்பதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

சுமார் ஒன்றரை வருட கால இடைவெளிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர் மீண்டும் பங்குகொண்டு வருகின்ற, இந்நிலையில், கடந்த 13ம் திகதி இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதன் மூலம், மீண்டும் அவரது சிறப்புத் தன்மை வெளிப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை கடந்த மாதம் இடம்பெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் மற்றும் இங்கிலாந்து அணியுடனான போட்டி என்பனவற்றில் அவரது பந்து வீச்சு வேகம் மணிக்கு 140 கிலோமீற்றராக இருந்துள்ளது.

எனினும் மீண்டும் அவர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் பங்குகொள்ள வந்துள்ள நிலையில் நான்கு போட்டிகளில் 10 விக்கட்டுக்களை மட்டுமே கைப்பற்றியிருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீ லங்கா கிரிக்கட் தேர்வுக்குழு தம்மை அணியிலிருந்து நீக்கலாம் என லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் தமக்கு விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டும்பட்சத்தில் அதுவே தமது இறுதி உலகக் கிண்ண போட்டியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே அந்தப் போட்டியில் தனக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் முழுத்திறைமையையும் வெளிப்படுத்துவதாக லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் தான் தற்போது அணியில் சாதாரண உறுப்பினராக இருப்பதாகவும் தமக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்போது மட்டுமே இலங்கை அணியில் விளையாட உள்ளதாகவும் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியில் தமக்கு விளையாட சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில் கனடா சென்று அங்கு விளையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மாவட்டங்களுக்கு இடையே இடம்பெற்ற போட்டிகளில் அதிக விக்கட்டுக்களை கைப்பற்றியவர் என்ற பெருமை தனக்கு கிடைத்ததாகவும் லசித் மாலிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.