அமெரிக்காவுக்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்ட இராணுவ மேஜர் பாலியல் குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்டார்…

இலங்கை அரசினால் அமெரிக்காவுக்கு சிறப்புப் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட மேஜர் தர அதிகாரி ஒருவர், அங்கு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற இந்த மேஜர் தர அதிகாரி அமெரிக்காவில் சிறப்புப் பயிற்சிக்காக அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

இவருடன் சேர்த்து அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் இரு அதிகாரிகளும், மூன்று இராணுவ அதிகாரிகளும் இந்தப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருந்தனர்.

ஹவாயில் பயிற்சி பெற்று வந்த போது, கடந்த 9ம் நாள், விடுதி அறையில் தொழில்நுட்ப சீரமைப்பு பணிக்காக சென்ற பெண் ஒருவரை, குறித்த இராணுவ மேஜர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியிருந்தார்.

இதையடுத்து அமெரிக்க காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மேஜர், ஹவாய் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, உடனடியாக இலங்கைக்குத் திருப்பி அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட மேஜர் தர அதிகாரியை, தற்காலிகமாக பணியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாகவும், துறைசார் மட்டத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

ஏனைய அதிகாரிகள் நால்வரும் தொடர்ந்து பயிற்சிகளை பெற்று வருவதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.