(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய நாளை(04) இடம்பெறவுள்ள சுதந்திர தின கொண்டாட்டத்தை மிகவும் எளிமையாக கொண்டாட அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதற்கமைய இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களின் சில அம்சங்களை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதற்கு முன்னர் சுதந்திர தின கொண்டாட்டங்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. எனினும் இம்முறை இரண்டு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவில் ஜனாதிபதியின் வருகையின் போது குதிரைப்படை வீரர்கள் அவருக்கு முன்னால் பயணிப்பது ஒரு பொதுவான நடைமுறையாக இருந்தது. எனினும் இந்த ஆண்டு, குதிரைப்படையை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
பரசூட் உதவியுடன் முன்னெடுக்கப்படும் வான வேடிக்கை நிகழ்வுகளும் இம்முறை இடம்பெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின அணி வகுப்பில் சேர்க்கப்படும் இராணுவ வாகனங்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.