(ஏ.எல்.நிப்றாஸ் – வீரகேசரி)
மன்னம்பிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற கோர விபத்தை அடுத்து நாட்டில் இடம்பெறுகின்ற பஸ் விபத்துக்கள், சாரதிகளின் கவனயீனம், பஸ் உரிமையாளர்களின் பொறுப்பற்ற தன்மை மற்றும் போக்குவரத்துச் சட்டங்களை இறுக்கமாக்க வேண்டியதன் அவசியம் பற்றியெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் மீளவும் உருவெடுத்திருக்கின்றன.
ஆனால், யதார்த்தத்தின் படி பார்த்தால் இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் இதனை மக்களும் அரசாங்கமும் மறந்து விடுவார்கள்.
ஏனெனில் இதற்கு முன்னரும் இதனைப் போன்ற பல விபத்துக்கள் இடம்பெற்றன. பல உயிர்கள் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. அப்போதெல்லாம் விபத்துக்களை கட்டுப்படுத்த வேண்டும் என எழுந்த குரல்கள் எல்லாம் காலவோட்டத்தில் அடங்கிப் போயின என்பதுதான் நமது அனுபவமாகும்.
கவனயீனமான – பொறுப்பற்ற சாரதிகள், போதைப் பொருள் பாவிக்கும் சாரதிகள், தரமற்ற பஸ்கள், இந்த சாரதிகள் எதனைச் செய்தாலும் அவர்களை இலகுவாக பணத்தைச் செலவளித்து காப்பாற்றக் கூடிய பஸ் உரிமையாளர்களான சுவந்தர்கள், இலஞ்சம் பெறும் போக்குவரத்து பொலிஸார் எனப் பல காரணங்கள் இதன் பின்னாலுள்ளன.
இது போலத்தான் நமது அரசியலையும் நோக்க வேண்டியுள்ளது.
அதிலும் குறி;ப்பாக, ‘முஸ்லிம் அரசியல்’ எனும் பயணத்தைப் பற்றியும் அரசியல் கட்சிகள் என்ற ‘பஸ்கள்’ பற்றியும் அவற்றின் ‘சாரதிகளாக’ இருக்கின்ற தலைவர்கள் பற்றியும் ‘நடத்துனர்களான’ எம்.பி.க்கள், மாகாண சபை உறுப்பினா்கள் பற்றியும் பேச வேண்டியிருக்கின்றது.
அவர்கள் சமூகத்திற்கு ஏற்படுத்துகின்ற இழப்புக்களை ஆராய்வது காலத்தின் தேவையும் கூட.
முஸ்லிம் சமூகமானது, பெருந்தேசியக் கட்சிகளில் (இ.போ.ச பஸ்களில்) சென்றால் நமக்கான பாதையில் பயணித்து, விரும்பிய இடத்தில் நிறுத்தி, நிர்ணயித்த இலக்கை அடைய முடியாது என்பதற்காகவே தனித்துவ அடையாள அரசியலில் (அதாவது, தனிப்பட்ட பயணிகள் வாகனங்களில்) பயணிக்கத் தொடங்கியது என்பதுதான் அடிப்படை வரலாறு ஆகும்.
முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியல் என்ற பயணத்தை ஆரம்பித்து வைத்தவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆவார். அதற்கு முன்பு வரை பலரும் இதுபற்றிப் பேசினாலும் அதனை அரசியல்மயப்படுத்தவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற முதலாவது பஸ்ஸின் சாரதியும் அவராகவே இருந்தார்.
அந்தவகையில், முஸ்லிம் சமூகமானது தனித்துவ அடையாள அரசியல் என்ற வழித்தடத்தில் பயணித்து, தமது எதிர்பார்ப்புக்களை அடைந்து கொள்வதற்காக அஷ்ரபின் பஸ்ஸில் நிம்மதியாக ஏறி அமர்ந்தது. அதற்குக் காரணம் அஷ்ரப் என்ற தகுதிவாய்;ந்த, பொறுப்புள்ள சாரதியும் அப்போதிருந்த நடத்துனர்களும் எனலாம்.
உண்மையில், ஒரு சாரதியில் நம்பிக்கையில்லை என்றால் அந்தப் பயணத்தில் எந்த பயணிக்கும் நிம்மதி இருக்காது. அஷ்ரபை தலைவராகக் கொண்ட அரசியல் பயணத்தில் அப்படியொரு நிலை முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கவில்லை.
அஷ்ரப்; என்ற ஆளுமை முஸ்லிம் அரசியலின் சாரதியாக இருந்த காலத்தில்தான் குறிப்பாக வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்கள் அந்த பயணத்தை முழுமையாக அனுபவித்தார்கள். அவரது தலையில் முழுப் பொறுப்பையும் கொடுத்துவிட்டு இடைக்கால பாடல்களைக் கேட்டுக் கொண்டு தமக்கான ஆசனங்களில் ஆயசமாக அமர்ந்திருந்தனர்.
எம்.எச்.எம்.அஷ்ரபின் மரணத்திற்குப் பிறகு எல்லாம் மாறிப் போனது. பஸ்கள் (கட்சிகள்), சாரதிகள் (தலைவர்கள்) மற்றும் நடத்துனர்கள் (எம்.பி.க்கள்) ஆகியோரின் போக்கு பற்றிய கவலைகள் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படத் தொடங்கிற்று.
தலைவர்களும் எம்.பி.க்களும் தளபதிகளும் பொறுப்பற்ற விதத்தில் செயற்படத் தொடங்கியதால், முஸ்லிம் சமூகத்தின் பயணம் இலக்கைச் சென்றடையுமோ என்ற கவலையுடன்தான் கடந்த கால்நூற்றாண்டு கழிந்திருக்கின்றது.
ஒவ்வொரு பஸ்ஸிற்கும் ஒரு புறப்படும் இடம், அடைவிடம் இருக்கின்றது. ஒரு வழித்தடம் (றூட்) இருக்கின்றது. மெதுவாகச் செல்ல வேண்டிய இடங்கள், நிறுத்த வேண்டிய இடங்கள் இருக்கின்றன.
எல்லாவற்றையும் விட சாரதியும் நடத்துனர்களும் பயணிகள் விடயத்தில் மிகப் பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டியிருக்கின்றது.
ஒரு சாதாரண பஸ்ஸிற்கே இத்தனை நியதிகள் இருக்கின்றது என்றால், ஒரு சமூகத்தை, தனியான இனக் குழுமத்தை வழிநடாத்துகின்ற முஸ்லிம் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளும் இதனை விடப் பன்மடங்கு பொறுப்புக்களும் எழுதப்படாத நியதிகளும் இருக்கின்றன என்பதை மறந்து விடக் கூடாது.
அதனைப் பின்பற்றினால்தான் முஸ்லிம் சமூகம் பாதுகாப்பான அரசியல் பயணத்தை மேற்கொள்ள முடியும். அதுமட்டுமன்றி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை, உரிய காலத்தில் அடைந்து கொள்ளவும் முடியும். அதனை அஷ்ரப் ஓரளவுக்குச் செய்தார்.
ஆனால், அதன்பிறகு முஸ்லிம்களுக்கான அரசியல் என்பது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கான அரசியலாக மாறியிருக்கின்றதா அல்லதுஇலக்குகளை நோக்கி கணிசமாக முன்னேறி இருக்கின்றதா என்பதை மீள்வாசிப்புச் செய்வதன் மூலம், இந்த சாரதிகள் அதாவது முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தமது பொறுப்பை நிறைவேற்றியுள்ளார்களா என்பதை இலகுவாக கணிப்பிட்டுக் கொள்ள முடியும்.
முஸ்லிம் சமூகத்தின் உரிமை, நலன், பிரச்சினைகளுக்கான தீர்வு, அரசியல் விடிவு என்பவற்றை நோக்கி அஷ்ரப் மிகக் கவனமாகச் செலுத்திய பஸ் வண்டியை அவர் எதிர்பராத ஒரு இடத்தில் நிறுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.
அந்த ஆசனத்தில் றவூப் ஹக்கீம் ஏறி அமர்ந்தார். அவரோடு வேறு சில தளபதிகளும் தொற்றிக் கொண்டனர்.
இதேவேளை, பேரியல் அஷ்ரப், றிசாட் பதியுதீன், அதாவுல்லா எனப் பலர் புதிய முஸ்லிம் கட்சிகளை ஸ்தாபித்தனர். ஹசன்அலி, பசீர் தலைமையிலான கட்சி, அசாத் சாலியின் கட்சி என சிறு முஸ்லிம் கட்சிகளும் உள்ளன.
ஆனால் இத்தனை கட்சிகள் (அதாவது பஸ்கள்) தனித்துவ அடையாளம் என்ற வழித்தடத்தில் கடந்த பல வருடங்களாக போட்டிபோட்டுக் கொண்டு ஓடிவருகின்ற போதிலும், இலக்கை நோக்கி முன்சென்றதாக தெரியவில்லை.
சில தலைவர்கள் தமது இலக்குகளையே மாற்றிக் கொண்டுள்ளனர். பணமும் பதவியும் அவர்களது இலக்குகளாக உள்ளன. சில தலைவர்கள் பெருந்தேசியக் கட்சிகளின் வழித்தடத்தில் பயணிக்கின்றனர். இன்னும் சில முஸ்லிம் எம்.பி.க்களும் அரசியல்வாதிகளும் தனித்தனியாக வியாபாரிகளைப் போல முஸ்லிம் அரசியலில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஆக மொத்தத்தில் முஸ்லிம் அரசியல் என்பது கடந்த 25 வருடங்களில் உண்மையான இலக்குகளை நோக்கி குறிப்பிடத்தக்க தூரம் முன்னேறவில்லை. அத்துடன் பயணிகள், அதாவது மக்கள் பற்றிய எந்தக் கவலையும் இன்றியே தமது அரசியல் என்ற வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது கற்பனையல்ல.
மர்ஹூம் அஷ்ரபைப் போன்று இவர்களும் சிறந்த தலைவர்களாக, சாரதிகளாக, நடத்துனர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் முஸ்லிம் மக்கள் இவர்களை தலைவர்களாக தலையில் வைத்துக் கொண்டாடுகின்றார்கள். நம்புகின்றார்கள். மீண்டும் மீண்டும் எம்.பி.க்களாக தெரிவு செய்கின்றார்கள்.
ஆயினும் இவர்கள் அவரைப் போல இல்லை என்பதை பின்னர் முஸ்லிம்கள் உணர்ந்து கொண்டனர்.
எவ்வாறிருப்பினும், இந்த பஸ் பாதுகாப்பற்றது, சாரதி சரியில்லை என்று தெரிந்து கொண்டே …..அதில் ஏறுகின்ற பயணிகளைப் போல, கணிசமான முஸ்லிம் மக்கள் இந்த அரசியல்வாதிகளுடன் பயணிக்கின்றனா்.
மாறாக தமது தலைவர்களை, எம்.பி.க்களை மாற்றிக் கொள்ள, தட்டிக்கேட்க முன்வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மையாகும். மறுபுறத்தில் அரசியல்வாதிகளும் திருந்தவில்லை.
முஸ்லிம் அரசியலில் மட்டுமன்றி, பெருந்தேசிய மற்றும் தமிழ்த் தேசிய அரசியலிலும் இதுதான் யதார்த்த நிலைமை எனலாம். மஹிந்த, கோட்டபாய, ரணில், சஜித், அனுர, மைத்திரி என சாரதிகள் மாறி மாறி தெரிவு செய்யப்பட்டாலும் நாட்டின் நாட்;பட்ட பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை.
அதேபோல் தமிழ் மக்களால் நம்பப்பட்ட தலைவர்கள்; இலக்குகளை நோக்கி தமது வாகனத்தை நகர்த்தியிருந்தாலும,; அது மிகக் குறைவேயாகும்.
இங்கு ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். அதாவது மன்னம்பிட்டியில் மட்டுமன்றி நாட்டின் பல இடங்களில் விபத்துக்குள்ளான பஸ்களின் சாரதிகளின் பொறுப்பற்ற செயற்பாடு குறித்து பல தடவைகள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும் கூட, அதனைப் பொருட்படுத்தாமல், செயற்பட்;;டதாலேயே விபத்துக்கள் இடம்பெறுகின்றன என்றால், இது உண்மையில் விபத்தா அல்லது ஒரு வகையான கொலையா? என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
இது நாட்டின் அரசியலுக்கும் பொருந்தும்.
குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் இலக்குகளை நோக்கி முஸ்லிம் அரசியல் தலைவர்களும் எம்.பிக்களும் சமூகத்தை அழைத்துச் செல்லவில்லை என்றும், அவர்களது அரசியல் அணுகுமுறையால் சமூகம் பலவற்றை இழக்க நேரிடுகின்றது என்றும் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.
ஆயினும், இதனையெல்லாம் கணக்கெடுக்காமல் ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற எகத்தாளத்தில் செயற்படுகின்ற முஸ்லிம் தலைவர்கள், தளபதிகள், எம்.பிக்களுக்கும் பொறுப்பற்ற ணபோக்கிற்கும் – இவ்வாறான ஒரு பஸ் சாரதிக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றதா என்பதை அரசியல்வாதிகளும் சமூகமும் சிந்திக்க வேண்டும்.