விமான வான் சாகச கண்காட்சி நிறைவு

விமான வான் சாகச கண்காட்சி நிறைவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விமான வான் சாகச கண்காட்சியின் நிறைவு விழா நேற்று(05) பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்றது.

மூன்று தினங்களாக நடைபெற்ற வான் சாகச கண்காட்சி கடந்த 3ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்நிகழ்வை இலங்கை விமானப்படை மற்றும் இந்திய விமானப்படை இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இறுதி நாள் நிகழ்வில் பங்கேற்ற கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன அவர்களினால் வரவேற்கப்பட்டார்.

1951 மார்ச் 02ஆம் திகதி ரோயல் விமானப்படையாக நிறுவப்பட்ட இலங்கை விமானப்படை, 1972 மே 22ஆம் திகதி இலங்கை விமானப்படையாக மாற்றப்பட்டது.

30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை நிறைவுசெய்யும் மனிதாபிமான நடவடிக்கைக்கு விமானப்படை தனது தீவிர பங்களிப்பை வழங்கியிருந்தது.

விமான வான் சாகச கண்காட்சியை பார்வையிடுவதற்கு பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.