முஸ்லிம்களுக்கு எதிரான அளுத்கம, பேருவளை வன்முறைகள் தள்ளுபடியாகுமா?

முஸ்லிம்களுக்கு எதிரான அளுத்கம, பேருவளை வன்முறைகள் தள்ளுபடியாகுமா?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அளுத்கம, பேருவளை உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் பதிவான இனவாத வன்முறை சம்பவங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான வாதங்களை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதிக்கு உயர் நீதிமன்றம் நேற்று ஒத்தி வைத்தது.

கடந்த 2014 ஜூன் 15 ஆம் திகதி அதிகாரிகொட, வெலிபிட்டிய, சீனன் வத்த, துந்துவ, பேருவளை, வெலிப்பன்னை உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்களை இலக்கு வைத்து வன்முறைகள் பதிவாகின.

இந்த வன்முறைகளை கட்டுப்படுத்த பொலிஸார் தவறியதன் ஊடாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், வன்முறைகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

மனுவின் பிரதிவாதிகளாக அப்போதைய பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன், அப்போதைய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, அப்போதைய பொலிஸ் விஷேட அதிரடிப் படை கட்டளைத் தளபதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆர். டப்ளியூ.சி.என். ரணவன, அபோதைய சட்டம் ஒழுங்கு செயலர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவ ஆரச்சி, சட்ட மா அதிபர், பின்னர் நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட 9 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

குறித்த வன்முறைக் காரணமாக 48 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டதாகவும், 80 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் ( சூட்டுக் காயங்கள் உட்பட), 17 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும், 2248 முஸ்லிம்கள் உள்ளூரில் இடம்பெயர்ந்ததாகவும், 79 முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் சேதமாக்கப்பட்டதாகவும் ( 17 வர்த்தக நிலையங்கள் முற்றாக அழிப்பு) மனுதாரர்கள் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

– எம்.எப்.எம்.பஸீர் –

COMMENTS

Wordpress (0)