நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு?

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சூயஸ் கால்வாய் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து நெருக்கடி காரணமாக, நாட்டின் எண்ணெய் தேவைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என, இலங்கை பெற்றோலிய களஞ்சியப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூயஸ் கால்வாய் பிராந்தியத்தில் ஜப்பானிய நிறுவனமொன்றுக்கு சொந்தமான பாரிய கொள்கலன் கப்பலொன்று, பயணிக்க முடியாத நிலையில் சிக்குண்டுள்ளது.

400 மீற்றர் நீளமானதும், 2 இலட்சம் டொன் எடை கொண்டதுமான, குறித்த கப்பல், கடந்த செவ்வாய்க்கிழமை இந்த அனர்த்தத்துக்கு உள்ளானது.

இதன் காரணமாக, 200 க்கு மேற்பட்ட கப்பல்கள், சூயஸ் கால்வாய் பிராந்தியத்தை தாண்டி பயணிக்க முடியாத நிலைமையில் காணப்படுகின்றன.

இந்நிலையில், இது தொடர்பில் கருத்துரைத்த இலங்கை பெற்றோலிய களஞ்சியப்படுத்தல் நிறுவனத்தின் தலைவர் மொஹமட் உவெய்ஸ், இந்த அனர்த்தத்தினால் நாட்டின் எண்ணெய் தேவைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என, குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, எந்தவொரு இடையூறும் இன்றி மக்களுக்கு எண்ணெய்யை வழங்க முடியும் என, அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 20 நாட்களுக்கு தேவையான எரிபொருள் தற்போது சேமிப்பில் உள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த கப்பல் போக்குவரத்து நெருக்கடி நிலைமை காரணமாக, சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகள் உயர்வடைந்த போதிலும், நாட்டினி எண்ணெய் விலைகளில் எந்தவொரு மாற்றமும் இருக்காது எனவும், அவர் கூறியுள்ளார்.

அத்துடன், தற்போதைய நிலையில் இந்தியாவில் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யப்பட்டால் விலை குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாகவும், இலங்கை பெற்றோலிய களஞ்சியப்படுத்தல் நிறுவனத்தின் தலைவர் மொஹமட் உவெய்ஸ், குறிப்பிட்டுள்ளார்.