ஜனாதிபதி – சீன ஜனாதிபதி இடையே உரையாடல்

ஜனாதிபதி – சீன ஜனாதிபதி இடையே உரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையில் நேற்று (29) மாலை நீண்ட நேர தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதில் அனைத்து துறைகளிலும் பரஸ்பர நன்மையுடன் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் இருவரும் ஒப்புக் கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு தாம் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும், பொது அரங்கில் எதிர்கொள்ளும் அநியாய அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் இலங்கைக்கு ஆதரவாக தொடர்ந்து நிற்பதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு சிறப்பான ஆதரவளித்ததற்காக ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன அரசாங்கத்திற்கு தனது மனமார்ந்த நன்றியை கோட்டாபய தெரிவித்தார்.

மேலும் 600,000 டோஸ் கோவிட் தடுப்பூசி வழங்கியதற்காக ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

வரவிருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை வரவேற்ற சீனத் தலைவர், கொவிட்-19 ஒரு சக்திவாய்ந்த சவால் என்றும், சீனா-இலங்கை உறவுகளை புதிய நிலைக்கு உயர்த்த உதவுவதாகவும் கூறினார்.

“கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவை இலங்கையின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பைக் கொண்ட இரண்டு திட்டங்களாகும்.

அவை விரைவில் நிறைவடையும் என்று நம்புகிறோம். துறைமுக நகரம் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளை பெரிதும் விரிவுபடுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது வேலையின்மைக்கும் ஒரு தீர்வாகும் ”என்று சீன ஜனாதிபதி கூறினார்.

2014 ல் இலங்கைக்கு விஜயம் செய்ததை நினைவு கூர்ந்த ஜி ஜின்பிங், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவுக்கு விஜயம் செய்வதைப் பார்க்க விரும்புகிறேன் என்றார்.

கோவிட் தொற்றுநோய் காரணமாக திட்டமிட்டபடி சீனாவுக்குச் செல்ல முடியவில்லை என்றும் இரு தரப்பினருக்கும் வசதியான நேரத்தில் சீனா வர நம்புவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.

சீனாவின் மக்கள் வங்கி இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கிய பரிவர்த்தனை நிதி வசதியை ராஜபக்ஷ பாராட்டினார், இது நிச்சயமாக இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த உதவும் என்று கூறினார்.

இலங்கை-சீனா நட்பின் அடையாளமாக ஹம்பாந்தோட்டையில் ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை நாடிய கோட்டாபய, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவிற்கு வாழ்த்தினார்.