அரசின் பொது முடக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

அரசின் பொது முடக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் |  பிரான்ஸ்) – பிரான்ஸ் நாட்டில் மீண்டும் பொது முடக்கம் அறிவித்துள்ள ஜனாதிபதியின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நோயாளிகளுக்‍கு சிகிச்சை அளிக்‍க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன
புதிய நோயாளிகளுக்‍கு இடம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக சில நாடுகளில் ஊரடங்கும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலை வேகமெடுத்துள்ளது. அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. ஒரு லட்சம் பேரில் 450 பேருக்‍கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்படுவதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் தினமும் 40 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோருக்‍கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நிலையில் உயிரிழப்புக்‍களும் அதிகரித்து வருகின்றன. மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்‍கையும் அதிகரித்து வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்‍க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன. புதிய நோயாளிகளுக்‍கு இடம் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே, கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் நாட்டில் நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரன் அறிவித்துள்ளார். அதன்படி, அடுத்த மூன்று வாரங்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக ஊரடங்கு வேண்டாம் என தவிர்த்து வந்தார் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரன். ஆனால், கொரோனாவின் கோரதாண்டவம் காரணமாக தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், இமானுவேல் மெக்ரனின் அறிவிப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்‍கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதே போல் பொதுமக்‍கள் தரப்பிலும் ஜனாதிபதியின் முடிவுக்‍கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.