ஒலிம்பிக் இரத்து இல்லை

ஒலிம்பிக் இரத்து இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் |  டோக்கியோ) – கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக கடந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.

கடந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ம் திகதி முதல் ஆகஸ்ட் 9ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது. வருகிற ஜூலை 23ம் திகதி முதல் ஆகஸ்ட் 8ம் திகதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஒலிம்பிக் போட்டிக்கணக்கான ஏற்பாடுகளை டோக்கியோ ஒலிம்பிக் குழு செய்து வருகிறது. இதற்கான சுடர் ஓட்டம் ஏற்கனவே தொடங்கி விட்டது. கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதல்படி ஒலிம்பிக் சுடர் ஓட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. இதற்கிடையே ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டி இரத்து செய்யப்படலாம் அல்லது தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதை போட்டி அமைப்பு குழு மறுத்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இரத்து செய்யப்படமாட்டாது என்று போட்டி அமைப்புக்குழுவின் தலைவர் ஷிகோ ஹசி மோட்டோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பல்வேறு கவலை அளிக்கும் வி‌ஷயங்கள் நடைபெற்றாலும் போட்டியை இரத்து செய்வதை பற்றி சிந்திக்கவே இல்லை என்றார்.