இந்திய பெருங்கடலில் சீனா ராக்கெட்டின் மிகப் பெரிய பாகம்

இந்திய பெருங்கடலில் சீனா ராக்கெட்டின் மிகப் பெரிய பாகம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனா விண்ணில் ஏவிய ராக்கெட்டின் 18 டன் எடையுள்ள மிகப் பெரிய பாகம் இன்று இந்திய பெருங்கடலில் மாலைத்தீவு அருகே விழுந்ததாக தெரியவந்துள்ளது.

விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 22 டன் எடை கொண்ட லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட் மூலம் விண்கலத்தை விண்வெளிக்கு சீனா அனுப்பியது.

இந்த விண்கலத்தை சுமந்து சென்ற ராக்கெட் தன்னுடைய பணியை நிறைவு செய்துவிட்டது. இதனையடுத்து 18 டன் எடை கொண்ட ராக்கெட்டின் பாகம் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் பூமியை நோக்கி திரும்ப தொடங்கியது.

18 டன் எடை கொண்ட ராக்கெட்டின் பாகம் பூமியில் எங்கு விழும்? என்ன மாதிரியான விளைவுகளை இது ஏற்படுத்தும் என்பது உலக நாடுகளில் விவாதமாக இருந்தது. அப்படி பூமியில் விழும்போது ஏற்படும் விளைவுகள் குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவும் தொடங்கினர்.

தற்போது இந்த ராக்கெட்டின் பாகம் இந்தியப் பெருங்கடலில் மாலைத்தீவு அருகே விழுந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. பூமியின் காற்று மண்டலத்துக்குள் இந்த ராக்கெட் பாகம் நுழையும்போது பெரும்பகுதி எரிந்துவிடும் எனவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் சீனா அலட்சியமாக இருப்பதுதான் இதற்கு காரணம் என்பது உலக நாடுகளின் விமர்சனம். இந்த விமர்சனங்களை ஏற்கனவே சீனா நிராகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.