ஜெர்மனி வெள்ளத்திற்கு இதுவரை 156 பேர் பலி

ஜெர்மனி வெள்ளத்திற்கு இதுவரை 156 பேர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | ஜெர்மனி) – ஜெர்மனியில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ஜெர்மனியில் கடந்த சில நாட்களாகவே கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தெற்கு ஜெர்மனி பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. வெள்ளம் காரணமாக இதுவரை 156 பேர் பலியாகி உள்ளனர். உயிர் பலி மேலும் அதிகரிக்கலாம் என்று மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்” என்று செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சேதம் ஏற்பட்ட பகுதிகளை அதிபர் ஏஞ்சலா மெர்கல் மேற்பார்வையிட்டார். மீட்புப் பணிகள் விரைவாக நடத்தப்படும் என்று உறுதியளித்தார்.

ஜெர்மனி மட்டுமல்லாது ஜெர்மனியின் அண்டை நாடுகளான, ஆஸ்திரியாவிலும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக இம்மாதிரியான மழைப் போக்கை உலக நாடுகள் எதிர்கொண்டு வருவதாக சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, காலநிலை மாற்றத்தால் எதிர்வரும் காலங்களில் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க உலகத் தலைவர்கள் இப்போதிலிருந்தே நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.