பாகிஸ்தான் நிலநடுக்கம் : 300 இற்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தான் நிலநடுக்கம் : 300 இற்கும் மேற்பட்டோர் காயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | இஸ்லாமாபாத்) – பாகிஸ்தானில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியாகியதோடு, 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தானில் பலோசிஸ்தான் மாகாணத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ரிக்டராக பதிவானதாக அந்நாட்டின் மாகாண பேரிடர் மேலாண்மை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப் புள்ளி பலோசிஸ்தான் மாகாணம் ஹர்னாய் மாவட்டத்தில் பூமிக்கடியில் 15 கி.மீ ஆழத்தில் நிலை கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பெண்கள், குழந்தைகள் ஹர்னாய் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட காவல் துணை ஆணையர் சோஹைல் அன்வர் ஹாஷ்மி கூறுகையில்,

“இதுவரை 20 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் 6 பேர் குழந்தைகள். முழுமையான சேத விவரம் இன்னும் கணக்கிடப்படவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன” என்றார்.

நிலநடுக்கம் குறித்து பாகிஸ்தானின் பேரிடர் மேலாண்மை வாரியத் தலைவர் ஜெனரல் நசீர் அஹமது நசீர் கூறுகையில், “நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி மலைப்பாங்கான பகுதி. அதனால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுளது. ஹர்னாய் மாவட்டத்திலிருந்து 15 கி.மீ சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்புக் குழுவினர் முழுவீச்சில் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் அரசு அலுவலகங்களும் சேதமடைந்துள்ளன” என்று தெரிவித்தார்.