ஸ்வீடன் முதல் பெண் பிரதமராக மக்தலீனா ஆண்டர்சன் தேர்வு

ஸ்வீடன் முதல் பெண் பிரதமராக மக்தலீனா ஆண்டர்சன் தேர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | ஸ்டாக்ஹோம்) – ஸ்வீடன் நாட்டின் முதல் பெண் பிரதமராக அந்நாட்டின் இப்போதைய நிதியமைச்சர் மக்தலீனா ஆண்டர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால் பிரதமராக இருந்த ஸ்டீபன் சமீபத்தில் தனது பதவியை இராஜினாமா செய்தார். ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. எனவே, பல கட்சிகள் சேர்ந்துதான் புதியபிரதமரை தேர்ந்தெடுக்கமுடியும்.

நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 349 இடங்களில் 175 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே பிரதமராக முடியும். சமூக ஜனநாயகக் கட்சியின் சார்பில் நாட்டின் இப்போதைய நிதியமைச்சர் மக்தலீனா ஆண்டர்சன் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டார்.

நாடாளுமன்றத்தில் நடந்தவாக்கெடுப்பில் மக்தலீனாவுக்கு ஆதரவாக 117 வாக்குகளும் எதிராக 174 வாக்குகளும் பதிவாயின. 57 பேர் வாக்களிக்காமலும் ஒருவர் அவைக்கு வராமலும் இருந்துள்ளனர். எதிர்த்து ஓட்டளித்தவர்கள் அதிகம் பேர் இருந்தாலும் ஸ்வீடன் நாட்டின் அரசியல் சட்டத்தின்படி புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதில் மெஜாரிட்டி அதாவது 175 உறுப்பினர்களின் எதிர்ப்பு பதிவானால்தான் அவர் தோல்வியடைந்ததாகக் கருதப்படும்.

ஆனால், 174 உறுப்பினர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததால் பிரதமராக மக்தலீனா வெற்றி பெற்று பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, சுவீடன் நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை 54 வயதான மக்தலீனா ஆண்டர்சன் பெற்றுள்ளார்.