ரசிகர்களுக்கு அனுமதியில்லை

ரசிகர்களுக்கு அனுமதியில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஜோகன்னஸ்பர்க்) – தென் ஆப்பிரிக்கா, இந்திய அணிகளுக்கு இடையே நடக்கும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 26-ம் திகதி சென்சூரியன் நகரில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் 4-வது அலை பரவி வருகிறது. இந்த 4-வது அலையில் அதிவிரைவாகப் பரவக்கூடிய ஒமைக்ரான் வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தப் பெருந்தொற்றுக்கு மத்தியில் இந்திய அணியினர் அங்கு பயணம் செய்து விளையாட உள்ளனர். தென் ஆப்பிரிக்கா சென்றதிலிருந்து இந்திய வீரர்கள் கடும் பயோ-பபுள் வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் ரசிகர்கள் மத்தியில் இரு அணியினரும் விளையாடினால், கொரோனா தொற்றுக்கு ஆளாகக் கூடும் என்பதால், பார்வையாளர்கள் இன்றி ஒருநாள், டி20 தொடரை நடத்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “உலகம் முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. உள்நாட்டிலும் 4-வது அலை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நாங்கள் வருத்தத்துடன் ஒரு செய்தியைத் தெரிவிக்கிறோம்.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை எனும் முடிவை இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் சேர்ந்து எடுத்துள்ளோம்.

இரு நாட்டு வீரர்களுக்கும் ஆபத்தில்லா பயோ-பபுள் சூழல் உருவாக வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரோன் வைரஸ் காரணமாக, உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.