ஓமிக்ரானால் புது வகை வைரஸ் உருவாகலாம் – WHO

ஓமிக்ரானால் புது வகை வைரஸ் உருவாகலாம் – WHO

(ஃபாஸ்ட் நியூஸ் |  ஜெனீவா) – ஒமிக்ரான் வேகமாக பரவுவதால் புதிய வகை வைரஸ்கள் உருவாகக்கூடும் என உலக சுகாதாரஅமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனாவின் புதிய வகையான ஒமிக்ரான் வைரஸ் பிரிட்டன், இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரகால அதிகாரி கேத்ரின் ஸ்மால்வுட் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முந்தைய ஆல்பா, டெல்டா கொரோனா வகை வைரஸ்களுடன் ஒப்பிடுகையில், ஒமிக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வேகமாக பரவும் தன்மை தான் அதிக அளவில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். தற்போது ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுவதால் விரைவில் அந்த வைரஸ் மாற்றம் பெறும். அப்போது புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகும். ஒமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது. அது மரணத்தையும் விளைவிக்கக் கூடியது. ஆனால், டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரான் சற்று ஆபத்து குறைந்ததுதான். அதேநேரம், புதிதாக தோன்றும் வைரஸின் வீரியம் எவ்வாறு இருக்கும் என யாராலும் கணிக்க முடியாது.

ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரத்தில் மட்டும் 50 லட்சம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. பிரிட்டனில் ஒரே நாளில் 2 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.