இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைத்த பேரிடியான செய்தி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கைக்கு உதவிவழங்குவது தொடர்பில் எப்போது உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்பது குறித்தோ எவ்வளவு கடன் வழங்கப்படும் என்பது குறித்தோ தற்போது தெரிவிக்க முடியாது என சர்வதேச நாணயநிதியம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச நாணயநிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் வோசிங்டனில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளார்.

சாத்தியமான நிதியுதவியின் அளவுகுறித்தும் ,அல்லது பணியாளர் நிலையிலான உடன்படிக்கை எப்போது கைச்சாத்திடப்படும் என்பது குறித்தும் தற்போது தெரிவிக்க முடியாது அதற்கு காலமுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அதிகாரிகள் முன்வைக்கும் – உறுதியளிக்கும் கொள்கை எவ்வளவு வலுவானது என்பதே உடன்படிக்கை எப்போது கைச்சாத்திடப்படும் என்பதை தீர்மானிக்கும் எனவும் ரைஸ் தெரிவித்துள்ளார்.

கடன்பேண்தகைமை மீளஏற்படுத்தப்படும் என்ற உறுதிமொழி எங்கள் சபைக்கு வழங்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடரும் நெருக்கடி குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம், விசேடமாக மனிதாபிமான நெருக்கடி குறித்து பொதுமக்கள் மீதான தாக்கம் குறித்து கரிசனை கொண்டுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே நாங்கள் அந்த நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கின்றோம்.ஒரு திட்டம் குறித்த கொள்கை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்காக எதிர்வரும் வாரங்களில் இலங்கைக்கு நேரடி விஜயமொன்றை முன்னெடுப்பது குறித்து திட்டமிடுகின்றோம்எனவும் ரைஸ் தெரிவித்துள்ளார்.

மே மாதத்தில் இலங்கை அரசாங்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளை மேலும் வலுப்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு முதல் ஆறுவாரங்களில் சர்வதேச நாணயநிதியத்துடன் உடன்படிக்கை சாத்தியமாகும் என இலங்கை அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ள நிலையிலேயே சர்வதேச நாணயநிதியத்தின் இந்த நிலைப்பாடு வெளியாகியுள்ளது.