விக்கிலீக்ஸ் நிறுவுனரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த ஒப்புதல்!

விக்கிலீக்ஸ் நிறுவுனரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த ஒப்புதல்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சியை அமெரிக்காவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரிதி படேல் ஒப்புதல் அளித்துள்ளார்.

எனினும் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அசாஞ்சிக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளதாக இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அசாஞ்சியை நாடு கடத்துவது அடக்குமுறை, அநீதி அல்லது முறைகேடு என்று இங்கிலாந்து நீதிமன்றங்கள் கண்டறியவில்லை அவர் அமெரிக்காவில் இருக்கும் போது சரியான முறையில் நடத்தப்படுவார் என்றும் இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் கசிந்த முக்கிய ஆவணங்கள் தொடர்பில் உளவு பார்த்தல் உட்பட 18 குற்றச்சாட்டுக்களுக்காக ஜூலியன் அசாஞ்சி அமெரிக்க அதிகாரிகளால் தேடப்பட்டு வருகிறார்.

விக்கிலீக்ஸ் மூலம் அமெரிக்க இராணுவப் பதிவுகள் மற்றும் இராஜதந்திர கேபிள்களின் பரந்த அளவிலான ஆவணங்களை வெளியிட்டன.

இது வோஷிங்டனை பாரிய பாதுகாப்பு ஆபத்து நிலைக்கு கொண்டு சென்றது.

அவுஸ்திரேலிய ஆசிரியர், வெளியீட்டாளர் மற்றும் ஆர்வலரான அசாஞ்சி, 2006 இல் விக்கிலீக்ஸை நிறுவினார்.

இதன் மூலமே பாாியளவான ஆவணக்கசிவுகள் பகிரப்பட்டன.

நவம்பர் 2010 இல், ஸ்வீடன் பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளின் பேரில் அசாஞ்சிக்கு சர்வதேச கைது உத்தரவை பிறப்பித்தது.

ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான தனது போராட்டத்தில் தோல்வியடைந்த பிறகு, அவர் பிணையையும் மீறி ஜூன் 2012 இல் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.

அரசியல் துன்புறுத்தலின் அடிப்படையில், அவர் ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்பட்டால், இறுதியில் அவர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்படுவார் என்ற அனுமானத்துடன், ஆகஸ்ட் 2012 இல் அவருக்கு ஈக்வடார் புகலிடம் அளித்தது.

இந்தநிலையில் ஈக்வடோர் அதிகாரிகளுடனான தொடர்ச்சியான பிரச்சினைகளை பிணக்குகளை அடுத்து, 2019, ஏப்ரல் 11 ஆம் திகதியன்று அசான்ஜியின் புகலிடம் திரும்பப் பெறப்பட்டு தூதரகத்திற்குள் இங்கிலாந்து பொலிஸார் அழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

இதன்பின்னர் பிணை சட்டத்தை மீறியதாக அவர் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு இங்கிலாந்தில் 50 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதனையடுத்து 2021, ஜனவரி 4 ஆம் திகதியன்று இங்கிலாந்தின் நீதிமன்றம் ஒன்று, அசாஞ்சேவை நாடு கடத்துவதற்கான அமெரிக்காவின் கோரிக்கைக்கு எதிராகத் தீர்ப்பளித்தது.

எனினும் லண்டனில் உள்ள உயர் நீதிமன்றம், 2021 டிசம்பரில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அசாஞ்சேயை அமெரிக்காவிடம் ஒப்படைக்கலாம் என்று தீர்ப்பளித்தது அத்துடன் அவருக்கு மேல்முறையீடு செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டது.