கோட்டாபயவுக்கு எதிராக மீண்டும் வழக்கு!

கோட்டாபயவுக்கு எதிராக மீண்டும் வழக்கு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

டீ.ஏ.ராஜபக்‌ச மன்றத்தின் செயற்திட்டத்துக்கு பொதுமக்களின் நிதி பயன்படுத்தப்பட்ட வழக்கில் கோட்டாபயவுக்கு எதிராக மீண்டும் வழக்குத் தொடர முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டீ.ஏ. ராஜபக்‌ச மன்றத்தின் ஏற்பாட்டில் டீ. ஏ. ராஜபக்‌ச மற்றும் தந்தினா ராஜபக்‌ச ஆகியோரின் உருவச்சிலை நிர்மாணத்துக்காக பெருந்தொகையான பொது நிதி பயன்படுத்தப்பட்டிருந்தது.

அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், சிலை நிர்மாணத்துக்காக பயன்படுத்திய நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதியை தனது சொந்த பணத்தில் திருப்பி வழங்க இணக்கம் தெரிவித்ததை அடுத்து வழக்கின் பிரதான சந்தேக நபரான கோட்டாபய ராஜபக்‌ச வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணைக்காக நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் காணி நிரப்பும் கூட்டுத்தாபனத்தின் சில ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த ஆவணங்களை திருப்பி பெற்றுக்கொள்வதற்கான நகர்வு மனு இன்று(04) மேல் நீதிமன்ற நீதிபதிகள் சம்பா ஜானகி மற்றும் நாமல் பலல்லே ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது கருத்து வெளியிட்ட நீதிபதி சம்பா ஜானகி, “இந்த வழக்கில் இருந்து கோட்டாபய ராஜபக்‌ச விடுவிக்கப்பட்டுள்ளாரே தவிர குற்றமற்றவராக விடுதலை செய்யப்படவில்லை.

எனவே அவருக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடுக்கும் சாத்தியம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேவைப்படும் பட்சத்தில் குறித்த ஆவணங்களை மீண்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் உத்தரவாதத்துடன் ஆவணங்களை விடுவிக்க உத்தரவிடுவதாக” தெரிவித்துள்ளார்.