நல்லாட்சி சன்னி லியோனை வரவேற்கிறதா – விமல்

நல்லாட்சி சன்னி லியோனை வரவேற்கிறதா – விமல்

நாட்டில் கசினோக்களே வேண்டாமெனக் கூறிய நல்லாட்சி அரசாங்கத்தின் ஆதரவாளர்கள், ஆபாசப்படங்களில் நடிக்கும் சன்னி லியோனை நாட்டுக்கு அழைத்து வந்து, கசினோக்களை ஊக்குவிக்கத் திட்டமிடுகிறார்களா என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.

‘எதிர்வரும் டிசெம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தரத் திட்டமிட்டுள்ளதாகவும் கொழும்பிலுள்ள கசினோவொன்றில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சியொன்றிலும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் சன்னிலியோன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் சூதாட்ட வலையமைப்பைக் கொண்டுள்ள வர்த்தகரொருவரின் அனுசரணையுடனேயே அவர் இங்கு வருகை தரவுள்ளார்’ எனவும் வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.

ஆபாசப்பட நடிகை சன்னி லியோனின் வருகைக்கு அத்துரலியே ரத்ன தேரர், எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ள விமல், கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது கசினோக்களை எதிர்த்தவர்களில் அவரும் ஒருவர் எனத் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாலியல் தொழிலாளர்களுக்கான சங்கம் எனத் தம்மைத் தாமே அழைத்துக்கொள்ளும் அமைப்பொன்று, பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியிருந்தது. இப்படியே சென்றால், நாடு எந்த நிலைமைக்குச் செல்லும் என்பதை நினைத்துப் பார்க்க முடியாதுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.