கறுப்புப் புத்தகத்தை சமர்ப்பிக்க கோருகிறார் அனுர

கறுப்புப் புத்தகத்தை சமர்ப்பிக்க கோருகிறார் அனுர

ஊழல், மோசடியாளர்களை சட்டத்தின்முன் நிறுத்துவதாக உறுதியளித்த நல்லாட்சி அரசு, அவர்களைப் பாதுகாக்கின்றது என்பது நிரூபணமாகியுள்ளது என்று எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், தேர்தல் காலத்தில் தற்போதைய அரசு தயாரித்த ‘கறுப்புப் புத்தகத்தை’ நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும், அந்தக் கறுப்பு முகங்கள் யாருடையவை என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்றுப் புதன்கிழமை கடந்தகால ஊழல், மோசடிகளுக்கு எதிராக துரித நடவடிக்கை எடுக்கவேண்டம் என வலியுறுத்தி ஜே.வி.பியால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையைச் சமர்ப்பித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், தொடர்ந்து கூறுகையில்;

தான் ஜனாதிபதியானதும் விமானநிலையத்தை மூடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஊழல், மோசடியாளர்கள் செல்லக்கூடாது என்பதற்காகத்தான் அவர் அப்படிக் கூறினார். ஆனால், அதன் பிறகு அவர் வேறு வேறு கதை கூறினார். 100 நாள் வேலைத்திட்டத்திலும் ஊழல், மோசடியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

பிரிட்டன், ஹொங்கொங் நாடுகளில் ஊழல், மோசடி தொடர்பான விசாரணை உதவிகளைப் பெற்று விசாரணைப் பிரிவொன்றை ஸ்தாபிப்பதாகக் அரசு கூறியது. இன்னும் ஊழல், மோசடியாளர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பணம் மீளப்பெறப்படும் என்றது. ஆனால், இற்றைவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களைப் பாதுகாக்கவே குறித்த இந்த அரசு செயற்படுகிறது என்பது நிரூபணமாகியுள்ளது.

மேலும் ஊழல், மோசடிகள் தொடர்பில் தற்போதைய அரசு ‘கறுப்புப் புத்தகம்’ ஒன்றைத் தயாரித்தது. இந்தக் குறித்த கறுப்புப் புத்தகத்தில் தற்போதைய ஜனாதிபதியின் செயலாளரின் பெயர்தான் முதலாவதாக உள்ளது. இந்தக் கறுப்புப் புத்தகத்தை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதிலுள்ள கறுப்பு முகங்கள் யாருடையவை என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

மேலும் டுபாய் வங்கிக் கணக்குகள் பற்றி குறிப்பிடப்பட்டன. இவற்றுக்கு என்ன நடந்தது என்பதைக் குறிப்பிடவேண்டும். கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளினூடாக பெறப்பட்ட பணத்தை மீளப்பெறவேண்டும். அதுமட்டுமன்றி, ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். அதுவரை எமது போராட்டம் போராட்டமாகவே தொடரும் என்றார்.

இதன்போது கடந்தகால அரசில் இடம்பெற்ற ஊழல், மோசடிகளை அநுரகுமார எம்.பி. பட்டியலிட்டு சுட்டிக்காட்டினார்.