ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீதான விவாதத்திற்கான திகதி அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் ஆற்றிய கொள்கை விளக்க உரை மீதான விவாதம் எதிர்வரும் 09, 10, 12ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மூன்று நாட்கள் விவாதத்துக்கு வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய நாடாளுமன்றம் எதிர்வரும் 09ஆம் திகதி பி.ப 1.00 மணிக்குக் கூடவிருப்பதுடன் பி.ப 4.30 மணி வரை விவாதம் நடைபெறும். அத்துடன், எதிர்வரும் 10 மற்றும் 12ஆம் திகதிகளி்ல் மு.ப 10.00 மணி முதல் பி.ப 4.30 மணிவரை பாராளுமன்றம் கூடவுள்ளது.

இந்த விவாதம் சபை ஒத்திவைப்பு விவாதமாக இடம்பெறும் என்றும், விவாதம் நிறைவடையும்போது வாக்கெடுப்பு நடத்தப்படாது என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன், எதிர்வரும் 09ஆம் திகதி 2022ஆம் வருடத்துக்கான 2021ஆம் ஆண்டு 30ஆம் இலக்க நிதி ஒதுக்கீட்டுச் சட்டம் (வரவுசெலவுத்திட்டம்) தொடர்பில் முன்வைக்கப்படும் திருத்தச் சட்டமூலமும், எதிர்வரும் 10ஆம் திகதி 22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

 

அதேநேரம்,நாடாளுமன்றக் கூட்டத்தொடர் அண்மையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இரத்துச் செய்யப்பட்ட குழுக்களைப் புதிய கூட்டத்தொடரில் மீண்டும் நியமிப்பது தொர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைய தெரிவுக் குழுவை (Committee of Selection) எதிர்வரும் 09ஆம் திகதி அமைத்த பின்னர் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உள்ளிட்ட ஏனைய குழுக்களை விரைவில் நியமிப்பதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாபய  பதவி விலகியதை அடுத்து ரணில் விக்கிரம சிங்க  நாட்டின் ஜனாதிபதியாக  பதவியேற்றுள்ளார். இந்நிலையில் 9ஆவது நாடாளுமன்றின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி ரணில் தலைமையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.