நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்போம் – சஜித்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் உள்ளடக்கங்களுடன் நாம் இணங்குகின்றோம். எனினும் அவற்றை வெறுமனே வார்த்தைகளால் அன்றி யதார்த்தத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும்.

அமைச்சுக்களுக்கான வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை. எனினும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 03 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை ஆற்றப்பட்டதன் பின்னர் , அது தொடர்பில் பாராளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை யார்த்தமானதாக இருந்தது. எவ்வாறிருப்பினும் ஒட்டுமொத்த அரசியல் உரைகள் தொடர்பில் அவதானம் செலுத்தினால், அந்த உரைகளுக்கும் அவற்றை செயற்படுத்துவதற்குமிடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது.

எனவே ஆற்றப்படும் உரை நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும். ஜனாதிபதியால் கூறப்பட்ட விடயங்கள் நடைமுறையில் சாத்தியமாகும் என்று எண்ணுகின்றேன்.

சர்வகட்சி ஒன்றிணைந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட வேண்டிய முறைமை தொடர்பில் இதன் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் கட்சி தலைவர்களை உள்ளடக்கிய சபையை அமைத்து செயற்படுதல் , ஏனைய காரணி பொது மக்களுக்கான மக்கள் சபையொன்றை நியமித்தல் ஆகும். பாராளுமன்ற கண்காணிப்பு குழுக்களை அமைக்கும் போது , அவை தற்போதுள்ளதை விட பாராளுமன்ற அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டதாக அமைய வேண்டும் என்று விரும்புகின்றேன்.

உத்தேச சர்வகட்சி கட்டமைப்பின் 3 பிரதான பகுதிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எவரேனும் அமைச்ச பதவிகளுக்காக சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதற்கு தயாராகுவார்களாயின் அது சர்வ கட்சி அரசாங்கமாக அமையாது. மாறாக மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிக்கும் ஒரு நிர்வாகமாகவே அமையும். அந்த விடயம் இந்த உரையில் உள்ளடக்கப்படாமையையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்த உரைத்தொடர்பில் சாதகமாக அவதானிக்க வேண்டும். குறிப்பாக தற்போதைய ஜனாதிபதிக்கு பல தசாப்தங்கள் அரசியல் அனுபவம் காணப்படுகிறது.

அமைச்சர்களுக்கான வரப் பிரசாதங்கள் , பாராளுமன்ற உறுப்பினர்களை வேட்டையாடுதல் உள்ளிட்ட விடயங்களால் நாட்டுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் நன்மை கிடைத்ததில்லை. இவற்றின் மூலம் மக்களுக்கு மேலும் மேலும் சுமைகளே அதிகரித்துள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர்களை வேட்டையாடுதல் , அமைச்சுப் பதவிகளுக்கான சந்தர்ப்பவாத அரசியல் என்பனவற்ற அரசாங்கமே சிறப்பானதாக அமையும்.

பாராளுமன்ற குழுக்களின் ஊடாக பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் சிறந்ததாக அமையும் என்று எண்ணுகின்றேன். அதற்கமைய நாட்டை மீளக்கட்டி எழுப்பும் வேலை திட்டங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்க நாம் தயார்.

ஆனால் அமைச்சுக்களுக்கான சிறப்புரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான அரசியலில் ஈடுபட நாம் தயாராக இல்லை. ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் காணப்படும் கொள்கைகள் சிறந்தவையாக காணப்படுகின்றன. எனினும் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இங்கு முக்கியமானதாகும். இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால் எமது சாதகமான ஒத்துழைப்புக்களை நாம் வழங்குவோம்.

கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய சபை, பொதுமக்கள் சபை உள்ளிட்ட குழுக்களின் ஊடாக எமது ஒத்துழைப்புக்களை வழங்குவோம். அதனை விடுத்து அமைச்சுக்கான வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ள முடியாது. ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் உள்ளடக்கங்களுடன் நாம் இணங்குகின்றோம் என்றார்.