மொனராகலை ஜும்மா பள்ளிவாசலின் மௌலவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தகவல்களை குறித்து பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்களை வழங்குமாறு கோரப்பட்டிருந்த நிலையில், அடிப்படைவாத குழு ஒன்றின் கடிதம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரை தெளிவுப்படுத்தாமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த மொனராகலை ஜும்மா பள்ளிவாசலின் மௌலவிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த மௌலவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவரை குறித்த குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விடுதலை செய்யுமாறு மொனராகலை மாவட்ட நீதவான் ஏ.எல். சஜினி சமரவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி மொனராகலை பொலிஸாரால் ஜம்மா பள்ளிவாசலிலிருந்து குறித்த கடிதம் கைப்பற்றப்பட்டு, மௌலவியும் கைதுசெய்யபட்டிருந்தார்.

அவருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 199ஆவது உறுப்புரையின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதனையடுத்து கடந்த 3 வருடங்களாக விசாரிக்கப்பட்டு வந்த வழக்கிலிருந்து சந்தேகநபர் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.