இன்றே வெளியேறிய கோட்டா கோ கம போராட்டக்காரர்கள்!

இன்றே வெளியேறிய கோட்டா கோ கம போராட்டக்காரர்கள்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கொழும்பு, காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’ போராட்டப் பகுதியில் உள்ள போராட்டக்காரர்கள் கலைந்து செல்வதற்கும் அங்குள்ள கூடாரங்கள் அகற்றப்படுவதற்கும் பொலிஸாரால் நாளை (05) மாலை 5 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்களால் இன்றைய தினமே அங்கிருந்த பெருமளவான கூடாரங்கள் அகற்றப்பட்டதுடன் போராட்டக்காரர்களும் அங்கிருந்து வெளியேறினர்.

அவ்வாறு கூடாரங்கள் அகற்றப்படுவதற்கு சொற்ப நேரத்துக்கு முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் ‘அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்தை எந்தவொரு ஆட்சியாளர்களாலும் முடிவுக்குக் கொண்டு வரமுடியாது. அதேபோன்று இந்த இடத்துக்குப் பதிலாக வேறோர் இடத்தில் போராடுங்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கூறவோ அல்லது அதுகுறித்துத் தீர்மானிக்கவோ முடியாது.

அதனை எம்மாலும் தீர்மானிக்கமுடியாது. ஏனெனில் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய இடத்தைப் பொதுமக்களே தீர்மானிக்கின்றார்கள் என்றும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் அங்கு வருகைதந்த பொலிஸார் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்வதற்கு வழங்கப்பட்டிருக்கும் கால அவகாசம் குறித்து மீண்டும் ஒலிபெருக்கி மூலம் தமிழ், சிங்கள மொழிகளில் அறிவிப்பு விடுத்தனர்.