இலங்கை பயணிகளின் பயணப் பொதிகளை வெளிநாடுகளிலேயே கைவிட்டுவிட்டு வரும் விமானங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கை பயணிகளின் பயணப் பொதிகளை வெளிநாடுகளிலேயே இறக்கி வைத்து விட்டு வரும் திட்டம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச விமான நிறுவனங்களுக்கு சொந்தமான இலங்கைக்கு வரும் விமானங்களுக்கு விமான எரிபொருள் கிடைக்காமையினால் அந்த நாடுகளில் இலங்கை பயணிகளின் பயணப்பொதிகளை இறக்கி வைக்கும் திட்டம் மறைமுகமாக முன்னெடுக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் விமானங்கள் மூலம் இது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

தற்போதைய சூழ்நிலை காரணமாக, விமானங்கள் தங்கள் நாட்டுக்கு பறக்க தேவையான எரிபொருளுடன் இலங்கை வர வேண்டியுள்ளது. அதற்கு அவசியமான இடம் அவசியமாக உள்ளமையினால் பயண பொதிகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னர் எரிபொருள் தாங்கிகளின் எடையைக் குறைத்து இலங்கை வந்த விமானங்கள் கட்டுநாயக்கவில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு மீண்டும் செல்ல கூடிய சூழல் காணப்பட்டமையினால் பயண பொதிகளுக்கு அதிக இடம் வழங்க முடிந்தது.

இந்த நிலையில் தவறுதலாக பொதிகளை விட்டுவிட்டு வந்ததாக கூறி தினமும் பயணிகளின் பைகளை வெளிநாட்டு விமானங்களிலேயே கைவிட்டுவிட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே பயணப்பொதிகளை இலங்கைக்கு கொண்டு செல்வதை விமான நிறுவனங்கள் வழக்கமாக கொண்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் மட்டும் இதுபோன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைகள் அந்தந்த நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் கைவிட்டுவிட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.