46 இலங்கையர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 46 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படையின் கப்பல் மூலம் இன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மேற்படி 46 பேரும் கடந்த ஜூலை 21 ஆம் திகதி அவுஸ்திரேலிய கடல் எல்லையில் வைத்து அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலிய எல்லைப் படையின்  ஓஷன் ஷீல்ட் (Ocean Shield) கப்பல் மூலம் அவர்கள்  கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.

சட்டவிரோத குடியேற்றவாசிகள் அவுஸ்திரேலிய எல்லைப் படையின் கப்பல் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய, அவுஸ்திரேலிய எல்லைப் படையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் கிறிஸ் வேட்டர்ஸ், இதுவரை அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 183 இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹோலி, தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் இயன் கெய்ன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.